– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) - ஐயர்


மத்தியகுழு உறுப்பினர்கள் நால்வரும் இப்போது இலங்கையில் தான் இருக்கிறோம். கோண்டாவிலில் பிரபாகரன் என்னைச் சந்தித்த மறுநாளே நாம் நால்வரும் இன்னும் சிலருடன் மாங்குளம் முகாமிற்குச் செல்கிறோம். பிரபாகரன் இப்போது என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. நாங்கள் பல தடவை மத்தியகுழு ஒன்று கூடல்களை நடத்துகிறோம்.

இது வரையில் மத்திய குழுக் கூட்டங்கள் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவே நடத்தப்படும். முதல் தடவையாக நமது வழிமுறை தவறானது என்று கருத்துக் குறித்து விவாதிப்பதற்காக ஒரு இறுக்கமான சூழலில் ஒன்றுகூடல் நடை பெறுகிறது. யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. எதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற சோகமான உரையாடல்கள் இடம்பெற்றன.

ஒவ்வொரு தடவையும் நான் முன்வைத்த முன் மொழிவுகள் குறித்தே பேசுகிறோம். குறிப்பாக மத்திய குழு கலைக்கப்ப்பட்டு செயற்குழு ஒன்றிடம் இயக்கத்தின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக வாதட வேண்டிய தேவை எழுகிறது. பின்னர் இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும், தேடப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்க்சியக் கல்வி கற்றுக்கொள்வதற்காக தமிழ் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதையும், அரசியல் பத்திரிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்பதையும் மத்திய குழுவில், நீண்ட விவாதங்களின் பின்னர் பிரபாகரனின் உடன்பாட்டுடன் முடிவெடுக்கிறோம்.

பிரபாகரன் முழுமனதுடனும் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை. ஆரம்பத்திலிருந்து பிரபாகரனோடு முழுமையாக ஒத்துழைத்த என்மீது பிரபாகரன் வெறுப்படைந்திருந்தது போலத் தென்பட்டது. எனக்குப் பின்பு எம்மோடு மத்திய குழுவிலிருந்த நாகராஜாவும் எனது கோரிக்கைகளுக்காகக் குரல்கொடுக்கிறார். இவையெல்லாம் பிரபாகரனை மேலும் அதிர்ப்த்திக்கு உள்ளாக்குகின்றது
இவ்வாறான வெறுப்புணர்வுடனும் வெறுமையுடனும் தான் செயற்குழு நியமனக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

பதினேழு வயதில் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளில் வெற்றிபெற்றிருந்த பிரபாகரன் தூய இராணுவ நடவடிக்கைகள் மட்டும் தான் வெற்றிக்கான ஒரே வழி என்பதை உறுதியாக நம்பியிருந்தார்.அதனை விமர்சிக்கின்ற யாரும் போராட்டத்தைக் சிதைவடையச் செய்வதாக எண்ணினார். நீண்ட விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள் ஊடாக தவிர்க்கவியாமல் எமது கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கிறார்.

செயற்குழுவை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டோம். அதுவும் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து செயற்குழு ஒன்றை ஒரு மனதான நியமன அடிப்படையில் உருவாக்குவது என்று முடிவு செய்கிறோம். யாழ்ப்பாண மாவட்டமே சந்திப்பிற்கு வசதியானதாக அமையும் என்ற அடிப்படையில் அங்கு எமது செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஒழுங்கு செய்வதாக முடிவெடுக்கிறோம்.

நீர்வேலியில் வாய்காற்தரவை என்ற இடத்தில் எமது ஆதரவாளர்கள் புதிய உறுப்பினர்கள் போன்றோர், அங்குள்ள ஒரு மைதானத்தில் கிரிககட் விளையாடுவதாகவும் அதே வேளை அதற்கு அருகில் நாங்கள் செயற்குழுவை உருவாக்குவதற்கான கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கிறோம்.

எமக்கு ஆதரவு வழங்கியவர்கள், தொடர்பாளர்கள், புதிய உறுப்பினர்கள் போன்றோர் அங்கு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர்.உளவாளிகளும் காவல் துறையினரும் சுதந்திரமாக நடமாடிய அந்தக் காலத்தில் யாரும் சந்தேகப் படாமல் இருப்பதற்காகவே துடுப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். மறுபுறத்தில் அதே மைதானத்தின் பின் பகுதியில் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய செயற் குழுவை உருவாக்குவதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.

வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஈழத் தமிழ்ப்பேசும் மக்களின் நாளாந்த வாழ்வில் முக்கிய பங்காகிவிடப் போகின்ற விடுதலை இயக்கம் ஒன்றின் வரலாற்றில் திரும்பல் புள்ளியாய் வாய்க்கால் தரவை மாறிவிடப் போகின்றது என்பதை அறியாமல் சில வயோதிபர்கள் துடுப்பாட்டத்தை இரசித்தபடி நடந்து சென்றார்கள். அவசர அவசரமாக சைக்கிளில் சென்ற மனிதர்களுக்குக் கூட நாம் ஒன்று கூடியிருப்பது அவர்களின் எதிர்காலத்தைக் குறித்துப் பேசுவதற்காகத் தான் என்பதை அறிந்திருக்க நியாயமில்லை.

மத்திய குழு உறுப்பினர்களான எம்மோடு,சாந்தன், சுந்தரம், மனோ, மாத்தையா, குமரப்பா, நந்தன், குமணன் மாதி,ராகவன் போன்ற உள்ளிட்ட அனைவரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.

பண்ணைகள், முகாம்கள், குறிப்பிடத் தக்களவு பணம், கணிசமான தொடர்புகள், உறுப்பினர்கள் என்று அவ்வேளையில் கோடுட்டுக் காட்டத்தக்க இராணுவ அணியாக வளர்ந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் மாற்றம் ஒன்றிற்கு உள்ளாவதைப் சில உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அவதானித்தனர். சிலருக்கு அனாவசியமான குறுக்கீடாகத் தெரிந்திருக்கும். எது எவ்வாறாயினும் நூறு கருத்துக்கள் மோதின.

வாக்கு அடிப்படையில் அன்றி ஒரு மனதான நியமன அடிப்படையிலேயே செயற்குழுவைத் தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. நபர்கள் குறித்து நீண்ட விவாதங்கள் ஏற்படுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் சென்று வெகுஜன வேலைகளை முன்னெடுகும் திறமை வாய்ந்தவர்களாக அமைய வேண்டும் என்பதை நாம் முன்னமே தீர்மானித்திருந்தோம். சட்டத்தின் வரம்புகளுக்குள் குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள், தேடப்படாதவர்கள் போன்றோரை செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்காகப் பிரேரிக்கிறோம். பலரின் பெயர்கள் முன் மொழியபடுகின்றன. பிரதேசங்களுக்கும் பிரதிநிதிகள் போன்ற அமைப்புக்கள் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. செயற்குழு பன்முகத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்கம் அனைவருக்கும் இருந்தது. மட்டக்கள்ப்பைச் சேர்ந்த டானியல் மட்டக்களப்பிற்கு ஒரு பிரதிநிதிதுவம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்.

அதே போல் திருகோணம்லைப் பிரதிநிதிதுவத்திற்காக ஆசீர் நியமிக்கப்படுகிறார். இவர்கள் தவிர, சாந்தன், அன்டன் சிவகுமாரன், குமணன் ஆகியோர் செயற்குழுவிற்குத் தெரிவாகினர்.

செயற்குழுவிற்குத் தெரிவான சிலர் இன்னமும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ்வதால் இவர்கள் குறித்த வேறு விபரங்களை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுவது பொருத்தமானதாகக் கருதவில்லை.

பிரபாகரன் இல்லாத தலைமை ஒன்று முதல் தடவையாக விடுதலைப் புலிகளை வழி நடத்தும் நிலை உருவாகிறது. அனைவரும் புதிய நம்பிகையுடனேயே இந்தத் தெரிவினை மேற்கொண்டோம். மிக நீண்ட நேரத்தை செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதிலேயே செலவழித்து முடித்திருந்தோம். துடுப்பாட்டம் பாதி நேரத்தைக் கடந்து உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. சூரியன் கூட உச்சியைக் கடந்து சற்றுக் கீழே இறங்கியிருந்தது நிழலுக்கான நம்பிக்கையை தந்தது.

செயற்குழு உருவாகிவிட்டது. இனி நாம் எம்மை மக்களுக்கு அறிமுகப்படுதும் நுளை வாயிலாக சஞ்சிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். நான் முன்வைத்த முன்மொழிவுகளிலும் சஞ்சிகை அல்லது பத்திரிகை குறித்துக் குறிப்பிடப்படிருந்தது. செயற்குழு உருவாக்கத்தின் பின்னர் பத்திரிகை வெளியிடுவது குறித்து அனைவரும் புதிய உற்சாகத்துடன் பேசிக்கொள்கிறோம். பத்திரிகையின் பெயர் “உணர்வு” என்று ஏறத்தாள ஒரு மனதாக முடிவெடுக்கப்படுகிறது.

அதே வேளை தேடப்படுகிறவர்கள் அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சியக் கல்வியையும் பயிற்சியையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய குழுவிலிருந்த நாகராஜா, நான், பிரபாகரன்,மற்றும் ராகவன், செல்லக்கிளி ஆகிய அனைவருமே அரசியற் கல்விக்காக தமிழ் நாடு செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டம் முடிவடைந்து அனைவரும் பண்ணைகளுக்கும் இருப்பிடங்களுக்கும் செல்கின்றனர். செயற்குழு தெரிவாகிய இரண்டாவது நாள் நான் எனது சகோதரி வீட்டிற்குச் சென்று ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு இந்தியாவிற்குச் செல்வது குறித்தும் தகவல் தெரிவித்துவிட்டு வரலாம் என எண்ணினேன். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கு சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு மறுபடி வரும் போது நிலைமை தலை கீழாக மாறியிருந்தது.

செயற்குழு தெரிவான பின்னர் கலாபதி மனோ மாஸ்டருடனும் பிரபாகனுடம் பேசியிருக்கிறார்.

மனோமாஸ்டரிடம் பேசிய கலாபதி இது வெறுமனே பிரபாகரனிற்கு எதிரான காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொள்வதற்கான செயற்பாடே தவிர, மக்கள் அமைப்புகளை உருவாக்கி புதிய திசைவழியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்குழு அல்ல என்று கூறிருக்கிறார். பிரபாகரனிடம் பேசிய கலாபதி இந்தச் செயற்குழு எல்லாம் பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சதிட்டம் என்றும் இதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இதே வேளை நந்தனுக்கும் மனோ மாஸ்டருக்கும் இடையேயான விவாதம் மறுபடி எழுந்த வேளையில் நாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டோம் இப்போது பிரபாகரன் வெளீயேறப்ப‌ட்டுவிட்டார் என மனோ மாஸ்டரிடம் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பாக, மத்திய குழுவில் நாங்கள் விவாதம் நடத்த நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களைச் சுந்தரம் போன்றோர் பண்ணைகளில் இருந்த ஏனைய உறுப்பினர்களுடன் மிகவும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர்.

இவை அனைத்தும் ஒருங்கு சேர, செயற்குழு என்பதே பிரபாகரனை அன்னியப்படுத்துவதற்கான சதித்திட்டம் என்ற ஒரு சிலரின் கருத்துக்கள் உள்ளரங்கிற்கு வருகிறது.

இவ்வாறு செயற்குழுவிற்கு எதிரான அபிப்பிராயம் குறித்த சில உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக சுந்தரம் தலைமையில் ஒரு குழுவும் பிரபாகரனுக்கு ஆதரவாக ஒரு குழுவும் உருவாகிறது. நான் எனது சகோதரி வீட்டிலிருந்து திரும்பி வந்த வேளையில் சுந்தரம் குழுவும் பிரபாகரன் குழுவும் தமக்குத் தெரிந்த ஆயுதங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியினர் மறப்பகுதியினரைச் சந்தித்தால் கொலை செய்துவிடுகின்ற கோரம் இரண்டு பகுதியினரிடமும் காணப்பட்டது.

பிரபாகரன் குழுவினர் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த ஆயுதங்களையும் சுந்தரம் குழுவினர் முத்தையன்கட்டுப் பகுதியிலிருந்த ஆயுதங்களையு கையகப்படுத்தியிருந்தனர். பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார். இதையறிந்த செல்லக்கிளி சுந்தரத்திடம் பிரபாகரன் ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களைக் கொலைசெய்யத் திட்டமிடுவதாக நடந்தவற்றை மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார். இதன் விளைவாக சுந்தரம் குழுவினர் முத்தயன்கட்டுப் பகுதியில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கு பிரபாகரன் குழுவினர் வந்தால் திருப்பித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிபுடன் இருந்தனர். அனைவரையும் விரக்தியும் வெறுப்பும் வெறுமையும் ஆட்கொண்டிருந்தது.

முன்னர் பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக மட்டுமன்றி ஒரு மக்கள் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்துதை ஆதரித்தவரும் ஏற்கனவே இடது அரசியலில் குறித்தளவு ஆற்றல் பெற்றவருமான மனோ மாஸ்டர் பிரபாகரன் சார்பு நிலை எடுத்திருந்தது பலரை விரக்திக்கு உள்ளாக்கியிருந்தது. அவர் தான் எமக்கு எல்லாம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். இவரின் இந்தத் திடீர் முடிபு இன்றைக்கு வரைக்கும் என்னால் மட்டுமல்ல பலராலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது.

மனோவின் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? நந்தனுக்கும் மனோவிற்கும் தொடர்ச்சியாக நிலவிவந்த முரண்பாடா, சுந்தரம் அரசியலை அன்றிப் பிரபாகரனை முதன்மைப்படுத்தி முன்னெடுத்த தனிநபர் தாக்குதல்களா என்று பல வினாக்கள் எனது வாழ்நாள் முழுவதும் விடையின்றியே தொக்குநிற்கின்றது.

மனோ மாஸ்டரைத் தொடர்ந்தே மாத்தையாவும் பிரபாகரனின் பக்கத்தை நியாயப்படுத்த ஆரம்பித்தனர்.

நான் முதலில் முத்தையன்கட்டுப் பண்ணையை நோக்கிச் செல்கிறேன். மக்கள் அமைப்புகளூடாக ஆயுதப் போராட்டத்தை உருவாகுகின்ற அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் என்று கூறுகின்ற சுந்தரம் குழுவினரிடமும் கூட ஆயுதங்களுக்காகச் சண்டை போட்டுக்கொள்கின்ற குழுவாதப் போக்கைக் காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் சார்ந்த அரசியல் வழிமுறை என்பது மிகக் கடினமான ஆனால் ஒரே சாத்தியமான வழிமுறை என்பதை உலகத்தில் வெற்றிபெற்ற போராட்டங்கள் எல்லாம் ஒரு முறை இருமுறை அல்ல ஒவ்வொரு தடவையும் தீர்க்கமான அனுபவங்களை எம்முன்னால் விட்டுச் சென்றிருக்கின்றன. பல ஆயிரம் வருடங்கள் சமூகத்தின் அழுக்குப் படர்ந்த சிந்தனை முறை எம் ஒவ்வொருவரையும் ஆட்கொள்வது உண்மைதான். ஆனால் அவை முன்னிலைப்படுத்தப்படும் போது தான் அழிவுகள் நிறைந்த முடிபுகளை நோக்கி வழிநடத்தப்படுகிறோம்.

சுந்தரம் குழுவினரிடம் ஆயுதங்களுக்காகச் சண்டை போட்டுக்கொள்வது தவறு என விவாதிக்கிறேன். பலர் உடன்படுகிறார்கள்.சுந்தரம் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்ற தனது நியாயத்தைச் சொல்கிறார்.நாகராஜா,சாந்தன்,குமணன்,நந்தன் போன்றோரும் ஆயுதங்கள் உடனடி அவசியமில்லை நமது உடனடி வேலை மக்கள் அமைப்பை உருவாக்குவதே என்று என்னுடன் சேர்ந்து உறுதியாக வாதிடுகின்றனர்.

முதலில் சுந்தரம் இதற்கு உடன்படவில்லை. ஒரு வகையில் தவிர்கவியலாத நிலையிலும், பல உறுப்பினர்களின் உந்துதலுக்கு உள்ளான நிலையிலும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு சுந்தரத்துடனிருந்த அனைத்து உறுப்பினர்களும் உடன்படுகிறோம்.

இப்போது பிரபாகரன் குழுவைச் சார்ந்த எம்மை முழுமையான எதிரியாகக் கணக்கிடாத ஒருவரைத் தெரிவு செய்து ஆயுதங்களை ஒப்படைப்பதாகத் தீர்மானிக்கிறோம்.

பிளவு ஏற்பட்ட வேளையில் பிரபாகரன் குழுவோடு இணைந்து கொண்டவர்களில் ராகவனும் ஒருவர். ராகவனுடன் பகைமுரண்பாடற்று உரையாடக் கூடிய சூழல் ஒன்று இருந்தது.

ஆக, நான் ராகவனை அழைத்து அவரூடாக ஆயுதங்கள், ஏனைய உரித்துக்கள், எஞ்சியிருந்த பணம் போன்ற அனைத்தையுமே பிரபாகரன் சார்ந்த குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றேன். சுந்தரத்தின் சலிப்பான பதிலுக்கு மத்தியில் எல்லோரும் ஒரே முடிவாக இதனை ஏற்றுக்கொள்கிறோம்.

– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஜன‍‍நாயகம் ஏற்பட வேண்டும் என்பதில் மிகுந்த‌ அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயற்பட்டவர்களில் மனோமாஸ்டர், அழகன், நந்தன், மாத்தையா,சுந்தரம் ஆகியோரைக் கோடிட்டுக் காட்டலாம் . இவர்கள் புலிகளின் உள்ளே ஜனனாயக வெளி ஒன்றை ஏற்படுத்துவதே முதலாவதும் முக்கியமானதுமான தேவை என்பதைக் குறித்துக் காட்டியவர்கள். மனோமாஸ்டர் ஓரளவு தெளிவான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஏனைய உறுப்பினர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதிலும், ஆர்வத்தை உருவாகுவதிலும் இவரின் பங்கு அளப்பரியயதாக அமைந்திருந்தது. மனோமாஸ்டர், புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பதாகவே இடதுசாரி அரசியலுடன் பரீட்சயமானவர் .

தனி நபர் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் மாற்றாக குறைந்தபட்ச அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைப்பதே போராட்டத்தின் வெற்றிக்கான திசை என்பதை உறுதியாக முன்வைத்தார்.

மனோமாஸ்ரரின் கருத்துக்களோடு பொதுவாக மாத்தையா உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். வறிய குடும்பத்திலிருந்து புலிகளில் இணைந்துகொண்ட மகேந்திரராஜா என்ற மாத்தையா இந்தக் காலப்பகுதியில் மிகுந்த தேடல் ஆர்வம் மிக்கவராகக் குறிப்பிடத்தக்கவர்.

மனோமாஸ்டருக்கும் நந்தனுக்கும் இடையே அடிக்கடி விவாதங்கள், கருத்து மோதல்கள் ஏற்படுவது வழமை. தெரிவு செய்கின்ற அரசியல் வழிமுறை குறித்தே அந்த முரண்கள் அமைந்திருக்கும்.

மனோ மாஸ்டர் ரொஸ்கியக் கருத்துக்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்தார். அகில இலங்கைப் புரட்சியின் ஒருபகுதியாகவே தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மனோமாஸ்டரின் பிரதான கருத்தாக அமைந்திருந்தது.

நந்தனைப் பொறுத்தவரை தமிழீழத்திற்கான புதிய ஜனநாயகப் புரட்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தார். இவ்வகையிலேயே இருவருக்கும் இடையேயான விவாதம் அமைந்திருக்கும்.
நந்தன், மனோமாஸ்டர் ஆகியோரிடையேயான முரண்பாடென்பது பல தடவைகள் தீவிர விவாதப் போராக முடிவதுண்டு.

உள் முரண்பாடுகளிடையே மனோமாஸ்டர், மாத்தையா, குமணன் போன்றோர் இயக்க வேலைகளில் அர்ப்பண உணர்வுடனேயே ஈடுபட்டுவந்தனர். நந்தன் ஆரம்பத்திலிருந்தே பண்ணை நடைமுறைகளிலும், இயக்கத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபாடற்றவராகவே காணப்பட்டார்.

எண்பதுகளின் பின்னர் தமிழீழ தேசிய விடுத்லை முன்னணியில்(NLFT) இணைந்து செயற்பட்ட நந்தன், அம்முன்னணியின் செயலாளராகவிருந்த விசுவானந்ததேவனின் பிரிவிற்குப் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.

இவ்வேளையில் பிரபாகரனை வெளியேற்றுவதே இயக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரே வழி என்பதையும், பிரபாகரன் அற்ற புலிகளை உருவாக்குவதே நோக்கம் என்பதையும் சுந்தரம் பிரச்சாரப்படுத்தினார். சுந்தரத்தின் இந்தக் கருத்தோடு நந்தன் மிகுந்த உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். பிரபாகரன் என்ற தனிநபரை முதன்மைப்படுத்திய அரசியலில் சுந்தரமும் நந்தனும் இணைந்து கொண்டனர்.

நான் முன்வைத்த “மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டும்” என்ற கருத்தோடு மனோமாஸ்டர் முழுமையாக ஒத்துழைத்தது மட்டுமன்றி நூல்களை வாசித்து தர்க்கரீதியான முடிபிற்கு வருவதற்கு ஏனைய போராளிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அன்றிருந்த சமூகப் புறச்சூழலில், பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக மட்டுமே புலிகள் என்ற அமைப்பை நோக்கி இணைந்திருந்தோம்.
இந்நிலையில், அழிவுகளை ஏற்படுத்த வல்ல தூய இராணுவ வழிமுறைக்கு மாற்றாக புதிய சிந்தனைப் போக்கு இயக்கத்தில் உருவாகியிருந்தது. நாம் வரித்துக்கொண்ட நோக்கத்தின் வெற்றிக்கான திசை என்பது குறித்தே எம் அனைவரினதும் கவனம் குவிந்திருந்தது.

பலரின் அர்ப்பணங்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் உருவாகிக்கொண்டிருந்த எமது இயக்கத்தை தவறான வழி முறைகளூடான அழிவுப் பாதையிலிருந்து மீட்ட்டெடுப்பதே எமது அனைவரதும் நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்பதை விட புலிகளின் தலைமையை மாற்றியமைத்தால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வை எட்டலாம என்பது சுந்தரத்தின் கருத்தாக அமைந்திருந்தது. அவரோடு நந்தன் போன்ற பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கில் அதிர்ப்தியடைந்திருந்த பலரும் உடன்பட்டிருந்தனர்.

என்னைப் பொறுத்த வரையில் நாம் பயணிக்கும் திசை தவறானது என்ற முடிபிற்கு வந்த பின்னர், புதிய அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன். பிரபாகரன் ஈறான அனைவரையும் புதிய அரசியல் வழிமுறைக்குள் இணைத்துக் கொள்வதனூடாக முன் நோக்கிச் செல்லலாம் என்ற கருத்தை இயக்க உறுப்பினர்கள் மத்தியில் முன்வைக்கிறேன்.

அவ்வாறான குறித்த வழிமுறை என்பது மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே ஆரம்பிக்கப்படலாம் என்ற கருத்தையும் முன்மொழிகிறேன்.

பதினேழு வயதில் போராட்டத்திற்காக அனைத்தையும் துறந்த போராளியான பிரபாகரன் அன்றிலிருந்து எந்த முற்போக்கு அரசியல் அணியாலும் அணுகப்படவில்லை. அப்போதிருந்த தூய இராணுவம் சார்ந்த சிந்தனை வட்டத்தினுள்ளேயே பிரபாகரன் முழுமையாக அமிழ்ந்து போயிருந்தார்.

தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அரசியல் ஆளுமைக்குள்ளேயே நாங்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரானவர்கள் எம்மளவில் துரோகிகளாகவே கருதப்பட்டனர். அவர்களின் பாராளுமன்ற அரசியலின் வன்முறை வடிவமாகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருந்தோம். கூட்டணியின் நேரடியான அரசியல் கட்டுப்பாடு இல்லாதிருந்தாலும் எமது சிந்தனைப் போக்கு அவ்வாறுதான் அமைந்திருந்தது.

பாரம்பரிய இடதுசாரிகள் என்று கூறிக்கொண்ட எவருமே எம்மை அணுகியதோ, நியாயமான போராட்டத்தை சரியான திசைவழி நோக்கி நகர்த்த வேண்டும் என்று எண்ணியதோ கிடையாது. தேசியப் போராட்டம் என்பது அவர்கள் மத்தியில் ‘தீண்டத்தகாத’ ஒன்றாகவே அமைந்திருந்தது.

மார்க்சிய நூல்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே நியாயமான வழிமுறைகள் குறித்த ஆரம்ப அறிவைப் பெற்றுக்கொண்டோம். ஒரு அரசியல் இயக்கத்தை வழி நடத்தும் தத்துவார்த்தக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சிந்தித்தது கிடையாது. கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் அரசியல் வழிமுறைகள் குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே பிரதான நோக்கங்களாகக் கொண்டிருந்தோம்.

நாம் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்கின்ற சிறிய அணியாக உருவாகியிருந்தோம்.

என்றுமில்லாதவாறு, குமரப்பா, மாத்தையா, ராகவன் சாந்தன், சுந்தரம், குமணன் போன்ற இன்னும் பல போராளிகள் அரசியல் தேடல்களிலும் விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பண்ணைகளில் தற்செயலாக சந்தித்த, சிந்திக்கத் தொடங்கிவிட்ட பலர் மார்க்சிய நூல்களும் கையுமாகத் தான் காணப்பட்டனர். அது ஒரு அலையாக ஆரம்பித்து இயக்கத்தின் குறித்த மட்டத்தில் வியாபித்திருந்தது. மக்கள் போராட்டம், ஜனனாயகம், மத்தியத்துவம், உட்கச்சிப் போராட்டம் என்று பல்வேறு தளங்களிலும் பரந்த அறிவுத் தேடலில் கணிக்கத்தக்க அளவானோர் ஈடுபட்டோம்.

எல்லாமே ஒரு சில மாத இடைவெளிக்குள் நடந்தவை தான். அரசியல் திட்டம் போன்றவற்றை முன்வைப்பதற்கு எம்மிடம் போதிய தெளிவு இருந்திருக்கவில்லை.

இவ்வேளைகளில் ஒரு இடதுசாரிக் கட்சியின் பின்பலம் இருந்திருக்குமானால், அவர்கள் எம்மை அணுகியிருப்பார்களானால் இன்று தெற்காசியாவின் தென்மூலையில் நிகழ்ந்த வெற்றிபெற்ற போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருப்போம்.

சுந்தரம் போன்றோர் முவைத்த தலைமைத்துவம் குறித்த முரண்பாடும், அரசியலை விட பிரபாகரன் என்ற தனி நபரின் நடவடிக்கைகள் குறித்த முதன்மைப்படுத்தலும் பல போராளிகளைக் கவர்ந்திருந்தது.

இப்போது முன்று வேறுபட்ட போக்குகள் உருவாகியிருந்தன.

1. சுந்தரம் சார்ந்தோர் முன்வைத்த கருத்தைக்கொண்ட பிரபாகரனுக்கு எதிரான குழுவினர்.

2. மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்று நான் முன்வைத்த கருத்து.

3. பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய உறுபினர்கள் பலரைக் கொண்ட குழு.

மனோமாஸ்டர், மாத்தையா, குமரப்பா போன்ற பலர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்தாலும், மக்கள் வேலைகளை முன்னெடுப்பதிலிருந்தே புலிகளில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தையே முன்வைத்தனர். இவை குறித்து பிரபாகரன் இலங்கைக்கு வருவதற்கு முன்பதாக நாம் விவாதிக்கிறோம்.

இறுதியாக நான் ஒரு சமரச முன்மொழிவை முன்வைக்கிறேன்.

1. இப்போதுள்ள மத்திய குழுவிற்குப் பதிலாக செயற்குழு ஒன்றைத் தெரிவு செய்தல்
(செயற்குழுவில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் அரச படைகளால் தேடப்படாத வெளிப்படையான மக்கள் வேலைகளை முன்னெடுக்கும் தகமையுடையவர்களாக அமைய வேண்டும் என்று கோரப்பட்டது.)

2. மக்களமைப்புக்களை உருவாக்கும் வேலைமுறைகளை ஆரம்பித்தல்.

3. அரசியல் தத்துவார்த்தப் பத்திரிகை ஒன்றை வெளியிடுதல்.

4. அப்பத்திரிகைக்கான பெயர் ஒன்றைத் தெரிவுசெய்தல்.

5. தனிநபர் படுகொலைகளையும் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளையும் மக்கள் அமைப்புப் பலம் பெறும் வரையில் தற்காலிகமாக நிறுத்திவைத்தல்.

6. பொலீசாரால் தேடப்படுகின்ற அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சிய கல்விகளில் ஈடுபடுதலும் முற்போக்கு அமைப்புகளோடு தொடர்புகளைப் பேணிகொள்ளலும் .

இந்த முன்மொழிவு எமது இயக்கத்திலிருந்த மூன்று வேறுபட்ட போக்குகளுக்கு இடையேயான சமரசமாகவும் அமைந்திருந்தது.

இங்கு பற்குணம், மைக்கல் கொலைகள் குறித்த விவாதங்களையும், பிரபாகரன் என்ற தனி நபர் குறித்த பிரச்சனைகளையும் இரண்டாவது பட்சமானதாகவும் மேற்குறித்த ஆறு அம்சங்களையும் முதன்மையானதாகவும் கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது உறுப்பினர்களை நோக்கிய எனது கோரிக்கையாக அமைந்தது.

சுந்தரம் முதலில் இதற்கு உடன்படவில்லை. தலைமையை மாற்ற வேண்டும் என்பதே பிரதானமானது என வாதிக்கிறார். பெரும்பாலானவர்கள் எனது திட்டத்தை ஏற்றுக்கொள்ள சுந்தரமும் அவர் சார்ந்த கருத்தை உடையவர்களும் தவிர்க்கவியலாதவாறு திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

இதே வேளை உமாமகேஸ்வரன் குறித்த பிரச்சனைகளுக்குப் பின்னர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்குகள் அதிகரிக்கின்றன. பிரபகரன் யாரையும் நம்புவதில்லை. தனது கட்டுப்பாடுகளை உறுப்பினர்களை நோக்கி இறுக்கப்படுத்துகிறார். அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேலுடன் லண்டன் திரும்பிச் சென்றுவிடுகிறார். பிரபாகரனுடன் தங்கியிருந்த ரவி பாலா போன்றோர் அவரது சர்வாதிகாரப் போக்கால் அதிர்ப்தி அடைகின்றனர். தலைமைக்கு எதிராகக் கேள்வி கேட்கக் கூடாது என ரவி சில தடவைகள் தம்பியால் எச்சரிக்கப்படுகிறார்.

இவ்வேளையில் தான் பிரபாகரன் எனது கடித்தை ஏற்று நாடு திரும்புகிறார். வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும் அழைத்துக்கொண்டு வருகிறார். கிட்டுவோடு வந்திறங்கிய பிரபாகரனைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். கிட்டுவை தண்டனை வழங்கி வீட்டிற்கு நான் அனுப்பி வைத்த விடயத்தைக் கூறுகிறேன். அது குறித்து இப்போதைக்குப் பேச வேண்டாம் என்றும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவோம் என்றும் பிரபாகரன் சொல்கிறார்.

நான் இயக்கத்தில் உருவான பிரச்சனைகள், எனது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஏனைய போராளிகளின் உணர்வலைகள் ஆகியவற்றைக் குறித்து விபரிக்கிறேன். பிரபாகரனை நூல்களை வாசித்துத் தர்க்கரீதியாகச் சிந்திக்குமாறு கோருகிறேன். நாங்கள் வரித்துக்கொண்ட வழிமுறை தவறானது நீண்டகால நோக்கில் அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பது பற்றியும் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறேன். இறுதியாக எனது முன்மொழிவுகளையும் விபரிக்கிறேன். பிரபாகரன் எதுவும் பேசவில்லை. ஆனால் மறுக்கவும் இல்லை.

இந்த உரையாடல்கள் நடைபெற்ற குமணன் வீட்டில் எங்களோடு ராகவனும் இருந்தார்.

புத்தகங்களை வாசிப்பதும் அரசியல் பிரச்சனைகள் குறித்த அறிவுத்தேடல் அவசியமானதாகவும் காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில் நாம் மார்க்சிய நூல்களை வாசிப்பது வழமை. நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ராகவன் ஒரு மார்க்சிய நூலை வாசித்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் திடீரென எழுந்து அந்தப் புத்தகத்தை ராகவனின் கைகளிலிருந்து பறித்து தூரே வீசிவிட்டு “இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆயுதங்களைக் களட்டிப் பூட்டக் கற்றுக்கொள்ளுங்கள் ” என்று சொல்கிறார்.


– ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்

கும்பகோணத்தைச் சேர்ந்த மேகநாதன் என்ற திராவிடர் கழக உறுப்பினர் எம்மோடு முழு நேர உறுப்பினராக வேலை செய்கிறார். ஐயர் ஒருவர் இயக்கத்தில் ,அதிலும் மத்திய குழுவில் பணியாற்றுவதாக கேள்விப்பட்டதும், ஐயரையெல்லாம் ஏன் சேர்த்துக்கொண்டீர்கள் எனக் கடிந்து கொண்டிருக்கிறார். பின்னதாக அவர் என்னைச் சந்தித்ததும் தனது அபிப்பிராயத்தை முழுமையாக மாற்றிக்கொண்டதாக என்னிடமே சொன்னார்.

மேகநாதன் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்ய நாம் தேடியலைந்ததைக் கண்டு மிரண்டுபோனார். அவரும் இதையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று தனது கருத்தை முன்வைக்கிறார். எமக்குச் சில ஆலோசனைகளும் வழங்குகிறார். என்னிடம் கூடத் தனிப்படப் பேசிப்பார்த்தார். எம்மைப் பொறுத்தவரை நமது வழிமுறை சரியானது என்ற இறுமாப்பில் தான் இருந்தோம்.

பின்னதாகப் சில உறுப்பினர்கள் இதெல்லாம் கலாபதியின் வேலையென்றும் அவர்தான் பிரபாகரனுக்குத் தலைமை ஆசையைத் தூண்டிவிட்டவர் என்றும் உமமகேஸ்வரனின் புறக்கணிக்கத் தக்க பாலியல் பிரச்சனையை முதன்மைப்படுத்தியவர் என்றும் கருத ஆரம்பித்தனர். இது குறித்துப் பலர் என்னிடம் பின்னாளில் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

கலாபதி குறித்த இந்த அபிப்பிராயம் பின்நாளில் நிகழந்த பல சம்பவங்களிலும் வெளிப்பட்டதாகக் கூறியவர்களும் உண்டு.

இப்போது உமாமகேஸ்வரனோடு எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவரைத் தவிர அவருக்காக அன்று இயக்கத்திலிருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை. இந்தியாவிலேயே எமது கண்களுக்குப் படாமல் தலைமறைவாகிவிடுகிறார். ஊர்மிளாவோடு நாங்கள் எந்தத் தொடர்புகளையும் பேணிக்கொள்ள விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையான தொடர்பு பின்பு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. ஊர்மிளா சில காலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டாலும் வேறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன.

இப்போது ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இலங்கைக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் மத்திய குழுவில் பொறுப்பனாவர்கள் யாரும் இல்லை என்பதாலும் எமது இயக்க நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்பதாலும் நான் முதலில் இலங்கை செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனுக்கு தண்டையார்பேட்டை வீட்டு அறியப்பட்டது என்பதால் ஏதாவது பிரச்சனை உருவாகலாம் என எண்ணினோம். இதனால் அந்த வீட்டைக் கைவிட்டு திருவான்மியூரில் ஒரு வீட்டை ஒழுங்குபடுத்தி வாடகைக்கு அமர்த்திக்கொள்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதீத கவனம் செலுத்தும் பிரபாகரன் உமாமகேஸ்வரனைக் கூடப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதியமை வியப்புக்குரியதல்ல.

அந்த வீட்டில் நான் இரண்டு நாட்களே தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் பின்னர் நான் குமரப்பா, சுந்தரம் ஆகியோர் எமது விசைப்படகில் இலங்கை நோக்கிப் பயணமாகிறோம். நான் அங்கு இல்லாத வேளையில் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கின் மீதும் வெறுப்பும் விரக்தியும் அதிகரித்த நிலையில் அனைத்துப் போராளிகளும் காணப்படுகின்றனர். பண்ணைகளுக்கு நான் சென்ற போது என்னிடம் இது குறித்து பரவலாகப் பேசப்படுகிறது.

மைக்கல் பற்குணம் போன்றோரின் கொலை தொடர்பாக பிரபாகரன் குமணனிடம் கூறியிருந்தார். குமணன் ஊடாக அந்தச் செய்தி அனைத்துப் பண்ணைகளுக்கும் பரவிவிடுகிறது. இது பின்னதாக மனோ மாஸ்டர், அழகன் போன்றோர் இயக்கத்தின் ஜனநாயகத் தன்மை குறித்தும் அதன் வழிமுறை குறித்தும் போர்க்குரல் எழுப்புகின்றனர். சுந்தரமும் இவர்களோடு இணைந்து கொள்கிறார்.

பயிற்சி முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட முறை, அதனுள் பிரபாகரனின் தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கு, பற்குணம், மைக்கல் கொலைச் சம்பவங்கள்,உமாமகேஸ்வரன் குறித்த பிரச்சனைகள் என்று அனைத்தும் ஒருங்கு சேர பிரபாகரனுக்கு எதிரான போக்கு ஒன்று இயக்கத்தின் அனைத்து மட்டத்திலும் உருவாகி வளர்கிறது.

நான் அங்கு சென்ற முதல் நாளே மனோ மாஸ்டருடன் இன்னும் சிலர் என்னிடம் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்துகின்றனர். இதற்கெதிரான உட்கட்சிப் போராட்டத்தில் என்னையும் இணைந்துகொள்ளுமாறு கோருகின்றனர். 79 இன் மத்திய பகுதி இவ்வாறு இயக்கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்ட காலகட்டமாகும். அவ்வேளையில் இவை குறித்து நான் சிந்திக்க ஆரம்பிக்கிறேன்.

எது எவ்வாறாயினும் பதினேழு வயதில் அனைத்தையும் துறந்து தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பிரபாகரனுக்கு இவைபற்றி இதுவரை யாரும் கூறியதில்லை. பிரபாகரனுடன் தவறுகள் குறித்துப் பேசினால் தனது வழிமுறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாக ஆரம்பத்தில் அமைந்தது.

திருகோண்மலையிலுள்ள தொடர்புகளைக் கையாளும் பொறுப்பு குமணனிடமே இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் மார்க்சிய கம்யூனிசத் தத்துவங்களோடு அறிமுகமானவர்களாக இருந்தனர். பயஸ் மாஸ்டர் என்பர் விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமுடையவர்களுக்கு மார்க்சிய அரசியலைக் கற்றுத்தந்தார். திருகோணமலைக்குக் குமணன் செல்லும் வேளைகளிலெல்லாம் அங்கிருந்தோர் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்திருந்தனர். அவற்றிற்குப் பதில் சொல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குமணனும் மார்க்சிய நூல்களைக் கற்க ஆரம்பித்திருந்தார்.

இது தவிர மனோமாஸ்டர். நந்தன் போன்றோர் மார்க்சியக் கல்வியுடன் ஏற்கனவே பரீட்சயமாகியிருந்தனர். இதனால் குமணனில் ஆரம்பித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு பிரிவினர் மார்க்சிய நூல்களை கற்பதில் ஆர்வமுடையோராக முயற்சி மேற் கொண்டனர்.

பின் நாளில் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவிருந்து அவர்களாலேயே இந்திய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட மாத்தையாவை எங்குபார்த்தாலும் சிவப்பு மட்டைகளோடு கூடிய மார்க்சிய நூலகளுடனேயே காணமுடியும். ஒரு தடவை நந்தன் மாத்தையாவைக் நோக்கி நூல்களை உண்மையில் வாசிக்காமல் அவற்றை வாசிப்பது போலப் போலியாக மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவே அவற்றுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். மார்க்சிய நூல்களை வாசிப்பது என்பதே எமக்கு மத்தியில் ஒரு அங்கீகாரம் என்கிற அளவிற்கு ஒரு அலைபோல அனைத்து மட்டங்களிலும் அது பரவியிருந்தது. மாத்தையாவும் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மிகத் தீவிரமாகக் கருத்துக்களை முன்வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப்பகுதியில் நான் குமணனின் வீட்டில்தான் தங்குவது வழமை.குமணனோ பழைய போராட்ட வரலாறுகள் குறித்த நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார்.

மிகக் குறுகிய காலத்தில் பல நூல்களை படித்திருந்தார். நிறைய நூல்களையும் வைத்திருந்தார். அவற்றை வாசிக்குமாறு என்னையும் வற்புறுத்தினார். அன்டன் பாலசிங்கத்தின் அரசியல் வகுப்புக்களுக்கு சென்று வந்த வேளைகளில் அவர் கற்பித்த இயக்கவியல் பொருள்முதல்வாதம் போன்ற எதுவுமே விளங்கிக்கொள்ள முடியாத சிதம்பர சக்கரம் போல் இருந்ததால் நான் ஆரம்பத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

அங்கேயே நான் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தவிர்க்க முடியாதவகையில் சில நூல்களை படிக்க முற்படுகிறேன். லெனினின் வாழ்க்கை வரலாறு, போல்சுவிக் கட்சி வரலாறு, அதிகாலையின் அமைதியில், ரஷ்யாவில் நரோட்னிக்குகள் குறித்த பிரச்சனை, அராஜகவாதம் குறித்த நூல்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திட்டம், மவோவின் இராணுவப் படைப்புக்கள் என்று குறிப்பான நூல்களை எனது வாழ்வின் முதல் தடவையாகப் வாசிபிற்கு உட்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. எல்லாமே மார்க்சிய நூல்கள் தான். அன்டன் பாலசிங்கம் ஒப்புவித்த வேளையில் புரிந்துகொள்ள முடியாதவற்றை எமது இயக்கத்தின் நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் படிக்கும் போது அவையெல்லாம் எமக்;காக எழுதப்பட்டவை போன்ற புத்துணர்வு ஏற்பட்டது.

முதலில் நான் படித்த நூல் லெனினின் வாழ்க்கை வரலாறு. யாரோ ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்ற வகையில் தான் நான் ஆரம்பித்தேன். அதில் சொல்லப்பட்ட விடயங்கள் எமது இயக்கத்தில் உருவாகியிருந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வை முன்வைப்பதக அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

லெனினுடைய சகோதரர் நரோட்னிக் என்று அழைக்கப்பட்ட அமைப்பில் இருந்தவர். ஸார் குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக அவர் போராடுகின்றார். தனிமனிதப் படுகொலைகளை மேற்கொள்வதன் மூலமே விடுதலைப் போராட்டத்தை வளர்க்க முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார். இறுதியில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு மரணமடைகிறார். லெனின் அவரது சகோதரரின் வழிமுறை தவறானது என வாதாடுகிறார்.

அராஜகவாத வழிமுறை என்று சொல்லப்பட்ட இந்த வழிமுறைக்கு எதிராக புதிய திசைவழியை முன்வைத்து சமூகத்தில் மக்களை அணிதிரட்டுகிறார். நாடு முழுவதும் சென்று வெகுஜனங்களை அமைப்பாக்குகிறார். அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளை முன்வைத்தே மக்களை அணியாக்குகிறார். போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்கிறார்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தனிமனிதப் படுகொலைகளிலிருந்தே அனைத்தும் ஆரம்பமாகியிருந்தது. மக்களோடு எமக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. மக்கள் போராடுவதற்காக அணிதிரட்டப்படவில்லை. அவர்கள் எமது வீரச் செயல்களை ரசிக்கும் பார்வையாளர்களாகவே தொடர்ந்தனர். அனைத்திற்கும் மேலாக நான் உட்பட பலரும் விடுதலைக்காத் தான் கொலைகளை மேற்கொள்கிறோம் என நம்பியிருந்தோம். ஆனால் எதற்கெடுத்தாலும் கொலை, கொலை என்பது துரையப்பாவில் ஆரம்பித்து தொடர்ந்துகொண்டிருந்து விரக்தியையே தருவதாக அமைந்தது.

நரோட்னிக்குகளின் நடவடிக்கைகள் என்பதுதான் நாம் இராணுவத்தைக் கட்டமைப்பது என்ற பெயரில் முன்னெடுத்துக்கொண்டிருந்தோம் என்பது அப்போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.

முதல் தடவையாக வேறு ஒரு வழிமுறையும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க எமக்கு முன்னால் இருப்பதாக உணர்ந்து கொள்கிறேன்.

எனக்குள்ளே ஒரு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற இனம்புரியாத உணர்வு மேலிட்டது.

நான் கற்றுக்கொண்டவை எமது நடவடிக்கைகள் போன்றவற்றின் அவற்றுடனான தொடர்ச்சி என்பன குறித்து மனோமாஸ்டர், நந்தன், மாத்தையா, குமணன் போன்ற பலரும் விவாதிப்போம்.

மாவோவின் இராணுவப்படைப்புகள் மக்கள் இராணுவத்தை எப்படி வெற்றிகரமாகக் கட்டமைப்பது எனக்க் கற்றுத்தந்தது. அவர்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தார்கள், மக்களோடு இணைந்து மக்கள் கண்காணிப்பில் போராட்டம் நடக்கின்ற போது தனி நபர் கொலைகள் அவசியமற்ற நிலை உருவாகும் என அறிந்து கொள்கிறேன். மக்கள் பணத்தில் தங்கியிருந்தால் கொள்ளைகளும், திருட்டும் தேவையற்றதாகிவிடும் என நம்பிக்கை தருகின்றன அந்த வரலாறுகள். மக்கள் நடத்துகின்ற வெகுஜனப் போராட்டங்களை ஊக்குவிப்பதும் அந்த வெகுஜனப் போராட்டங்களிற்கு ஆதாரமாக இராணுவத்தை மக்களின் கண்காணிப்பில் கட்டமைப்பதுமே ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை என உணர்கிறேன். எமது தேசத்தின் விடுதலைக்கான பாதையை மக்கள் பலத்தோடு, உலக முற்போக்கியக்கங்களின் துணையோடு நாம் வகுத்துக்கொள்ளலாம் என நம்பிக்கை கொள்கிறேன்.

தனி மனிதர்களின் தூய்மைவாதம், அரசியலை விமர்சிப்பதற்கு மாறாக தனிமனித நடவடிக்கைகளை குறை கூறுதல் போன்ற விடயங்களுக்கு எல்லாம் முன்னைய போராட்ட அனுபவங்கள் விடை பகிர்ந்தன. துரோகிகளைத் தீர்மானிக்கும் “அரசியல் பொலீஸ்காரர்களாக” நாம் உலா வந்தமை போன்ற பல விடயங்களை நாம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறேன்.

என்னிலும் அதிகமாக மனோ மாஸ்டர், நந்தன், போன்றோர் மார்க்சிய இயக்கங்கள் குறித்தும் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக எவ்வாறு அணுகுவது என்பன குறித்து தெரிந்து வைத்திருந்தாலும் நான் இவற்றையெல்லாம் எனது நீண்ட போராட்ட வரலாற்று அனுபவத்திலிருந்து பார்க்க முடிந்ததில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த பார்வை ஏற்படுகிறது.

ஆயுதங்களிலும் அதிகமாக,பணத்தைச் சேகரித்துக் கொள்வதிலும் அதிகமாக, ஆட்பலத்தையும் இயக்கப்பிரச்சாரத்தையும் மேற்கொள்வதிலும் , இயக்கத்திற்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக்கொள்வதிலும் அதிகமாக மக்களமைப்புக்களை உருவாக்க்க வேண்டும் என்ற ஆர்வம்தான் எனக்கு ஏற்படுகிறது.

இதெல்லாம் குறித்து, மனோ மாஸ்டர், நந்தன், அழகன் போன்றோரோடு அடிக்கடி விவாதம் நடத்துவோம். சுந்தரம் ஏற்கனவே சுப்பிரமணியம் போன்ற இடது அரசியல் வாதிகளுடன் தொடர்பிலிருந்ததால் அவரும் நாம் முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார். எது எவ்வறாயினும் சுந்தரத்தின் பிரதான பிரச்சனையாக இருந்தது பிரபாகரன் மட்டும்தான். பிரபாகரனை பிரதியிட்டு புதிய சர்வாதிகாரமற்ற தலைமையை உருவாக்கினால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதுதான் அவரின் பார்வையாக அமைந்தது.

ஆக அமைப்பினுள் இப்போது இரண்டு வகையான போக்குகள் உருவாகின்றன. முதலாவதாக சுந்தரம் முன்வைத்த பிரபாகரனை நீக்கி இன்னொருவாரால் அவரைப் பிரதியிடுவதனு;டாக மக்கள் அமைப்புகளை உருவாக்குவதோ அல்லது அதுபோன்ற ஏனைய ஜனநாயகப் பணிகளை முன்னெடுத்தல் என்பது. இரண்;டாவதாக நாம் ஒரு அரசியலை முன்வைக்கிறோம் அதனை அமைப்பினுள் பிரச்சாரம் செய்து அதனை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது. இரண்டுக்குமே ஒரு பொதுவான இயல்பு இருந்தது எனபது உண்மை.பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான போராட்டம் என்பதே. ஆனால் இரண்டுமே அடிப்படையில் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டவையாக அமைந்தன.

இன்னொரு எல்லையில் நான் அனுபவ அரசியலையும் தத்துவார்த்தப் பக்கத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்தது போல தேசியப்பற்றுள்ள பிரபாகரனும் புரிந்துகொள்வாரானால் முழு இயக்கத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்பினேன்.

இதே காலப்பகுதியில் கிட்டு வாழ்ந்த பண்ணையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. கிட்டு மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்தவராயினும் வல்வெட்டித்துறையில் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட பரம்பரையைச் சார்ந்தவரல்ல. வல்வெட்டித்துறையில் மீன்பிடிக்கும் கூலித் தொழிலாளர்களை ஏனைய உயர் சமூகத்தினர் மதிப்பதில்லை. கிட்டுவின் பண்ணையில் யோன் என்ற மூத்த உறுப்பினரின் சகோதரரும் இணைந்திருந்தார். அவர் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். கிட்டு அவரை அவமதிப்பது போலவே பலதடவைகள் நடந்துகொண்டிருக்கிறார். தவிர,இரண்டு தடவைகள் அவரை அடித்துத் துன்புறுத்தியிருந்தார். அவ்வேளைகளில் அவரை எச்சரித்து இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டார் என்ற உறுதிமொழியை வாங்கியிருந்தேன்.

ஆனால் மூன்றாவது தடவையாகவும் கிட்டு அவருக்கு அடித்திருக்கிறார். இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை உருவான போது,கிட்டுவை பண்ணையை விட்டு வீட்டில் போய் இருக்குமாறு அனுப்பிவிடுகிறேன். அவர் வல்வெட்டித்துறைக்குச் சென்றுவிடுகிறார்.
போராட்டத்திற்கான எமது திசைவழி தவறானது என்ற முடிபிற்கு நான் உட்பட பெரும்பாலோனோர் வந்தடைகிறோம். மக்கள் சார்ந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்த அடிப்படையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி அவர்களைப் போராடாப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பாட்டிற்கு வருகிறோம். ஆக, எமது திடீர் இராணுவ நடவடிக்கைகளையும், கொலைகளையும் நிறுத்திவிட்டு வெகுஜன வேலைகளை முன்னெடுத்து மக்களைப் போராட்டத்திற்கும் தற்காப்பு யுத்ததிற்கும் தயார்படுத்த வேண்டும் என்று பலரும் கருத ஆரம்பித்தனர்.

இப்போது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய போக்கை பிரபாகரன்,நாகராஜா ஆகியோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் அவர்களுக்குக் கடிதம் எழுதுவதாகத் தீர்மானிக்கிறேன். அதற்கு முன்பதாக இயக்கத்தில் உருவாகியிருந்த இரண்டு போக்குகளுக்கு இடையிலான சமரச முயற்சியாக அனைவரிடமும் ஒரு பொதுவான கருத்தை முன்வைக்கிறேன். பற்குணம்,மைக்கல் கொலை குறித்த பிரச்சனைகளை எல்லாம் இப்போதைக்குப் பேசாமல்,வெகுஜன வேலைகளையும் தத்துவார்த்தக் கல்வியையும் அதனோடிணைந்த மக்கள் அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே அது. சுந்தரம் ஆரம்பத்தில் எதிர்ப்புத்தெரிவித்த போதும் இறுதியில் ஒரு இணக்கத்திற்கு வருகிறார்.

ஆக அந்தக் கடிதத்தில் ஒன்றை மட்டும் தான் குறிப்பிடுகிறேன். நாங்கள் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறை தவறானது.அழிவுகளை ஏற்படுத்த வல்லது. இது குறித்து நாங்கள் அவசரமாகப் பேச வேண்டியுள்ளது.அனைவரையும் உடனடியாக நாட்டுக்குத் திரும்பி வருமாறு அழைப்புவிடுக்கிறேன். கடித்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட பிரபாகரன், நாகராஜா,பேபிசுப்பிரமணியம் உட்பட அனைவரும் உடனடியாகவே நாடுதிரும்புகின்றனர். இந்தியாவில் ரவியும் பாலாவும் மட்டுமே தங்கியிருக்கின்றன
(பாகம்16) : ஐயர்

நான் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்ட வேளையில் என்னோடு சுந்தரம், குமரப்பா, மாதி ஆகியோரும் சென்னை நோக்கிப் பயணமாகின்றனர்.வேதாரண்யம் கடற்பகுதி ஊடாக இந்தியா சென்றடைந்த நாம் அங்கிருந்து தஞ்சாவூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு பின்னதாக சென்னை வந்தடைகிறோம். இந்த இடைவெளிக்குள் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு பெரிதாகிறது. அவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்படுகின்றன. அவர் இப்போது யாரையும் சந்திப்பதில்லை. அவர் எம்.எல்.ஏ விடுதியிலேயே தங்கியிருந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

பின்னர் அவர் அங்கிருந்தபடியே சம்பவம் தொடர்பாக நான் உட்பட்ட மத்திய குழுவினர் நித்தலின்பனார் இல்லத்தில் உமாமகேஸ்வரனிடம் இது குறித்து விளக்கம் கோருவதென முடிவாகிறது. இவ்வேளையில் அன்டன் பாலசிங்கமும் எம்முடன் இருக்கிறார். மத்திய குழு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்ட அதே வேளை இன்னுமொன்றையும் நாம் ஒழுங்கு செய்துகொள்கிறோம். உமாமகேஸ்வரன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாது முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் வாதிட்டால் அவரை அன்றே கொலைசெய்துவிடுவது என்றும் தீர்மானிக்கிறோம். பிரபாகரனால் முன்மொழியப்பட்டு எம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் ஒழுங்கு செய்யப்படுகின்றனர்.

சுந்தரம் அப்போதுதான் என்னோடு இலங்கையிலிருந்து சென்னை வந்து சேர்ந்திருந்தார். உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் தயாராகிவிட சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் சைதாப்பேட்டை பாலத்திற்கு அருகாமையில் வைத்துக் கொலைசெய்வதாக ஏற்பாடாகிறது.

உமாமகேஸ்வரனை உணர்வுமிக்க போராளியாகத் தான் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவர். இராணுவத் தூய்மைவாதத்தில் ஊறிப்போன எனக்கு உமாமகேஸ்வரனின் நடவடிக்கை துரோகமாகத் தான் தென்பட்டது. அனைத்திற்கும் மேலாக உமாமகேஸ்வரனிற்கு தனது ஊரில் ஒரு காதலி இருந்தார் என்பதும் எனக்குத் தெரிந்திருந்ததால் அவர்மீதான வெறுப்பு அதிகமாகியிருந்தது. அவரையே உமாமகேஸ்வரன் பின்நாளில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபாகரன், நான், நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகிய அனைவரும் உமாமகேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

சென்னையின் வெம்மை சுட்டுக்கொண்டிருந்தது. மிக நீண்ட நேரமாகியும் உமாமகேஸ்வரன் அங்கு வந்து சேரவில்லை. அவர் இனிமேல் வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தாகவேண்டியாயிற்று. அவர் வரவில்லை. நாங்கள் மட்டுமல்ல கொலைசெய்வதற்குத் தயாராக நின்றவர்களும் ஒருவகையான கலக்கத்துடன் திரும்பிவிடுகின்றனர்.

உமாமகேஸ்வரன் அன்று அங்கு வந்திருந்தால் அப்போதே பிரபாகரன் அனுப்பியவர்களால் கொலை செய்யப்பட்டிருப்பார். அதிஷ்டவசமாக அவர் அன்று உயிர்பிழைத்துக் கொள்கிறார். பின்நாளில் நடந்தவற்றை வைத்து அனுமானிக்கும் போது சுந்தரம் தான் உமா மகேஸ்வரனுக்கு கொலைத் திட்டமிடல் குறித்த தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையானதாகவே தெரியவந்தது. இதனால் தான் உமாமகேஸ்வரன் அங்கு எதிர்பார்த்தபடி வரவில்லை என்பது பலரும் பின்னர் ஊகித்துக்கொண்டார்கள்.

இந்த வேளையில் அன்டன் பாலசிங்கம் இந்த விடயம் பெரிதுபடுத்த வேண்டிய ஒன்றல்ல என்று ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் பேசிய போதும் நாம் அனைவரும் பிரபாகரன் கூறுவதே சரியானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். உமாமகேஸ்வரன் வராவிட்டாலும் விளக்கமளிப்பதற்காக ஊர்மிளா அங்கு சமூகமளித்திருந்தார்.அன்டன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரை இந்தப்பிரச்சனை முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய ஒன்றல்ல என எம்மிடம் கூறிய போதும் பிரபாகரனுக்கு எதிராகப் பேசுவதற்கு அவருக்குப் போதிய துணிவு இருந்திருக்கவில்லை.

இதே வேளை பிரபாகரனுடன் படகில் இந்தியாவிற்கு வந்த சந்ததியார் புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் எம்மிலிருந்து ஒரு உளவாளி அனுப்பபப்ட்டார். நான் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் என்னை அழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று கூறுகிறார். எனக்கெல்லாம் பிரபாகரன் கூறுவதே சரியானதாகப்பட்டது. நானும் தனிமனிதத் தூய்மைவாதக் கண்ணோட்டத்திலேயே வளர்ந்தவன். மைக்கல் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பிரபாகரன் செய்வதெல்லம் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழத்திற்காகவும் என்றே நம்பியிருந்தவன். பதினேழு வயதுச் சிறுவனாக உணர்ச்சி வேகத்தில் பிரபாகரன் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இலங்கை அரசை அதிரவைக்கும் வெற்றியைக் கொடுத்தது. அப்போது ஏற்பட்ட நம்பிக்கை எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிறைவேற்றி ஒரு பலமான இராணுவத்தை உருவாக்கிவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.

பிரபாகரனும் அவரைத் தொடர்ந்து நாமும் துரோகி,எதிர்ப்புரட்சிக்காரன்,சமூகவிரோதி என்று எண்ணுபவர்களை எல்லாம் அழித்து நிர்மூலமாக்கிவிடுதல் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தோம். இது தான் ஆயிரமாயிரம் தேசபக்தர்களையும், சமூக உணர்வு படைத்தவர்களையும் எதிர்காலத்தில் கொன்றொழித்தது.

எம்மத்தியில் உறைந்து கிடந்த அர்ப்பண உணர்வை சரியான அரசியலை நோக்கி வளர்த்தெடுக்க யாரும் முன்வரவில்லை. அதற்கான வேலைத்திட்டம் குறித்துக்கூட யாரும் சிந்திததில்லை. எந்த அரசியலுமின்றி சிறிய இராணுவ வெற்றிகளினூடாகக் கிடைத்த நம்பிக்கையை மட்டுமே எமது தொடர்ந்த வேலைமுறையாக்கிக் கொண்டோம். முப்பதாண்டுகால புலிகளின் வரலாற்றையும் கூட இந்தச் சிந்தனை முறைதான் தீர்மானித்தது. சில இளைஞர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு எதிராக இளைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கோபம் கொண்டு போராட முன்வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்துவது அபாயகரமானது.

இலங்கையில் சண்முகதாசன் தலைமையில் ஒரு தத்துவார்த்தப் போராட்டமே எமக்குத் தெரியாமல் எமக்கு வெளியில் நடந்து கொண்டிருந்தது. அவர்களெல்லாம் அனைத்தையும் இழந்து போராட முன்வந்த எம்மை நெறிப்படுத்த வேண்டும் என்றோ எம்மோடு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றோ கிஞ்சித்தும் முயற்சித்ததில்லை. பாலசிங்கத்தின் வரவு கூட எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. எமது தவறுகளை நியாயப்படுத்துவதிலிருந்தே அவரின் அரசியல் ஆரம்பிக்கிறது.சந்ததியார் கூறியதெல்லாம் எனக்கு ஒரு அரசியல் சார்ந்த கருத்தாகப் படவில்லை. ஏதோ உமாமகேஸ்வரனுடைய நண்பர் என்ற அடிப்படையில் அவரை நியாயப்படுத்துகிறார் என்றே கருதினேன்.

இப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னால் அவருக்குத் தெரிந்தவாறே ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். அவர் வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர். இந்தக் காலப்பகுதியில் அன்டன் பாலசிங்கம் மார்க்சிய வகுப்புக்களை நடத்துகிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்றெல்லாம் பல கனதியான விடயங்கள் குறித்துப் பேசுவார். அவை யாருக்கும் புரிவதில்லை. குமரப்பா, சாந்தன் ஆகியோர் அக்கறையாக குறிப்புக்கள் எடுத்து அவற்றைப் படிப்பார்கள். எனக்கு எதுவும் புரிவதில்லை. பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர் அவரின் வகுப்புகளுக்கு வருவதே கிடையாது.

அன்டன் பாலசிங்கத்தை நாங்கள் எல்லாம் அண்ணா என்றுதான் அழைப்போம். மிக எளிமையாக அழகாகப் பேசவல்லவர். அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார். பிரபாகரன் கூட அவர் மீதான ஆழமான மதிப்பு வைத்திருந்தார்.

உமாகமகேஸ்வரன் கொலையிலிருந்து தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார். சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள் எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர் அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக நானும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறேன். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, நான் ஆகியோரே விவாதிக்கிறோம். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.

இறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க நாங்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறோம். நான் சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் அவரை எச்சரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்பப்படுகிறது. நான் சந்ததியாருடன் முன்னமே நீண்ட நேரம் பேசியிருந்தமையால் எனக்கு அவருடன் பேசுவதற்கான வெளி ஒன்று இருந்தது. நான் அவரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறேன். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவோமோ என்ற பயம் கூட அவரிடம் இருந்தது. அதுகுறித்தும் என்னிடம் பேசினார்.

நாங்கள் உங்களைக் கொலைசெய்யமாட்டோம் ஆனால் நீங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறோம் என நான் கூறி அவரை இலங்கைக்கு அனுப்பிவைக்கிறோம்.ஒரு தனிமனிதனின் அரசியல் உரிமையை ,பேச்சுரிமையை நாங்கள் கையிலெடுத்துக்கொண்டோம். நூறு கருத்துக்கள் மோதட்டும், நூறு பூக்கள் மலரட்டும் என்ற அழகான கவிதையின் ஆழம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு கருத்தையே கண்டு பயந்துபோய் கொன்று போட்டுவிடுகிற அளவிற்குக் கோழைத் தனமாக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள பல நாட்கள் கடந்திருக்கின்றன.

எம்மிடம் விடுதலை உணர்வு இருந்தது. அதற்கான வழிமுறைகளை நாங்கள் தனிமனிதத்தூய்மை வாத உணர்வின் அடிப்படையிலிருந்தே கட்டமைத்துக்கொண்டோம். தூய்மையானவர்களாகக் எம்மை நாமே கருதிக்கொண்டோம்.அதையே பிரகடனப்படுத்திக் கொண்டோம். போராட்டத்தின் முன்னோடிகளான நாம்தான் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உறுதியுடன் நிற்கின்றோம்.எம்மிடம் தூய்மையும் நேர்மையும் ஆழப்பதிந்து கிடக்கின்றது. இவற்றிற்கெல்லாம் யார் எதிர் வந்தாலும் அவர்கள் எம்மைப் பொறுத்தவரை துரோகிகளே. அழிக்கப்பட வேண்டியவர்களே.

மக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி இப்போது எமது கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம் செய்கிறார்…
– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

இந்தியா சென்ற எமது உறுப்பினர்கள் முதலில் மதுரைக்குச் சென்று மதுரையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியுடன் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு ஏனையோரும் தங்கியிருந்தனர். அங்கு (திராவிடர் கழகம்) தி.க விலிருந்த பலர் எமது இயக்கத்திற்கு அறிமுகமாகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. திராவிடக் கொள்கையின் மறு முகம் தமிழ்த் தேசியமாக அமைந்திருந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியாகக் கூடச் செயற்பட்டது. திராவிடக் கொள்கையின் தலித்தியக் கூறுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த பொதுத் தளமும் இருந்ததில்லை. ஆனால் எம்மைப் பொதுவாக அவர்கள் சமூகப் போராளிகளாகவே கருதினர். பல திராவிட இயக்கத் தொண்டர்கள் எம்மோடு இணைந்துகொள்ள விரும்பினர்.
 
எமது உறுப்பினர்கள் தங்கியிருந்தது செஞ்சி ராமச்சந்திரனின் விடுதி என்பதால் அங்கு அனைவரும் தங்கியிருக்க வசதியீனம் காணப்பட்டதால் தண்டையார்பேட்டையில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். பூபதி என்ற சேலத்தைச் சேர்ந்த எமது ஆதரவாளர் மூலம் அந்தவீடு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் எம்.எல்.ஏ விடுதியிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருக்க ஆரம்பித்தனர்.

1979 இன் ஆரம்பக் காலப்பகுதியில் நடந்த இச்சம்பவங்கள் குறித்த தகவல்களைப் பெரும்பாலும் இலங்கையிலிருந்த எனக்கு கடித மூலமும் நேரடிச்சந்திப்புகள் மூலமும் தெரிவித்துக்கொள்வார்கள். அப்போது தமிழ் மன்னன் என்ற சென்னைத் தமிழர் ஒருவர் எமக்கு நிறைய உதவிகள் செய்வார்.தவிர மேகநாதன் என்ற தமிழ் உணர்வாளரும், தி.கவின் உறுப்பினருமான ஒருவர் முழு நேர ஊழியராக எமது இயக்கத்தில் இணைந்து கொண்டார் சில காலங்களில் வீரமணி என்ற ஒருவரும் இந்தியாவிலிருந்து பகுதி நேரமாக எம்மோடு இணைந்துகொண்டார்.

உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கவும் ,தேடப்படுபவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி வரவும் இருப்பிடத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தஞ்சாவூரிலும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். ஈழத்திற்கு தேவையான தளபாடங்களைச் சேர்த்து அனுப்பவும், அங்கிருந்து வருகின்றவர்களை தற்காலிகமாகத் தங்க வைப்பதற்காகவும் இந்த வீடு பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையிலிருந்து பிரபாகரனும் அவரோடு புறப்பட்ட மூவரும் சென்னையிலிருந்த தண்டையார்பேட்டை வீட்டிற்கே வந்து சேர்கின்றனர்.

அவ்வேளையில் இங்கிலாந்திலிருந்து அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேல் பாலசிங்கத்துடன் சென்னையில் எம்மைச் சந்திப்பதற்காக வந்து சேர்கிறார். அவர் வந்ததுமே புலிகளின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் உட்பட அனைவருடனும் பேசுகிறார். மார்க்சிய அரசியல் வகுப்புகளும், வெளியீடுகளும் அவசியமானவை என்று கூறுகிறார்.

பாலசிங்கம் தமிழ் நாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே துண்டுப்பிரசுரம் ஒன்றைப் புலிகளின் பேரில் நாடு முழுவதும் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி…’ என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப்பிரசுரம் பாலசிங்கத்தால் எழுதப்பட்டு இந்தியாவில் அச்சிடப்படுகிறது. அதன் பிரதிகள் இலங்கையில் வினியோகம் செய்யப்படுவதற்காக எனக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. துண்டுப் பிரசுரம் எமக்குக் கிடைத்ததும் நாம் வேறுபாடுகளை மறந்து புதிய உற்சாகத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறோம்.

இதே காலப் பகுதியில் இலங்கையில் இனவாதத்தை வெளிப்படையாகவே பேசிய சிங்கள அரசியல் வாதிகளில் இலங்கை அமைச்சர் சிறில் மத்தியூ மிகப்பிரதானமானவர்.

சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை மேலும் நஞ்சூட்டிய குறிப்பிடத்தக்க தலைவர்களில் சிறில் மத்தியூவும் ஒருவர். இவர் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுச்சி கொள்ளுங்கள்’ என்ற நூலை எழுதியவர். ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசில் அரசவை அமைச்சராகப் பணிபுரிந்தவர். ‘யார் புலிகள்’ என்ற துண்டுப் பிரசுரம்  1979 இல் இவர் தபால் தலைப்புடன் அனைத்து பொது அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ‘தமிழர்கள் இலங்கையை அழிக்க வந்தவர்கள்’ என்று வெளிப்படையாகவே பேசிவந்தவர். இவரது மகன் நத்தா மத்தியூவும் பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர் என்பதோடல்லாமல், மகிந்த ராஜபக்ச அரசில் ஊவா மாகாணத்தின் ஆளுனராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமணன் மனோமாஸ்டர் போன்ற ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாமும் சிறில்மத்தியூவின் அதே தபால் தலைப்பைப் பயன்படுத்தி துண்டுப்பிரசுரத்தை அரச திணைக்களங்களுக்கும் அதன் மையங்களுக்கும் அனுப்பிவைப்பதாகத் தீர்மானித்து அவரின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் உறையை பிரசுரித்துக் கொள்கிறோம். இது அரச திணைக்களங்களுக்கு கிடைக்கும் அதே வேளை குறித்த நேரத்தின் அனைத்து வாசிக சாலைகள் பொது மையங்கள் பாடசாலைகள் போன்ற இடங்களுக்கு இருவர் கொண்ட அணிகளாகப் பிரிந்து தமிழ்ப் பகுதிகளில் வினியோகம் செய்வதற்காக பண்ணையிலிருந்தவர்களைத் தயார் செய்கிறோம்.
 
திட்டமிட்டபடி பிரசுரம் பெரியளவில் அனைத்து மட்டங்களையும் சென்றடைகிறது. ஒரு ‘அதிரடி’ நடவடிக்கை போன்று அமைந்த இந்த நிகழ்வின் பின்னர் புலிகள் குறித்து தமிழ் மக்கள் பரவலாகப் பேசிக் கொள்வதையும் அவர்களிடம் புதிய நம்பிக்கை துளிர்விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

பிரசுரம் பரவலாகக்ச் சென்றடைந்த சில நாட்களில் அது குறித்து இலங்கை உளவுப் பிரிவு மிகுந்த அச்சம் கொள்கிறது. குறைந்தது ஆயிரம் பேர் இணைந்து திட்டமிட்டுத் தான் இப் பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று கணிப்பிட்ட இலங்கை இரகசியப் பொலீசாரின் அறிக்கையை இலங்கையின் அனைத்து நாளிதழ்களும் பிரசுரிக்கின்றன.

சிறி லங்கா அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களும், இன அடக்கு முறையும் இராணுவ வடிவங்களாக உருவாகிக்கொண்டிருந்த வேளையில் பிரசுரம் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.

அவ்வேளையில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா போன்றோர் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உறங்குவதற்காக மட்டுமே தங்குமிடங்களுக்கு வருகின்ற அளவிற்கு மிகவும் தீவிர இயங்கு சக்திகளாகத் தொழிற்பட்டனர். உமாமகேஸ்வரன், நாகராஜா ஆகிய இருவருமே மிகுந்த அர்ப்பண உணர்வோடு செயலாற்றுபவர்கள். இவர்கள் சென்னையில் ஆரம்பித்து தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் இயக்கத்தின் தேவைகளுக்கான பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த வேளையில் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு உமாமகேஸ்வரனிடம் இருந்ததது.

பிரபாகரன் சென்னைக்கு வந்த பின்னர் தளத்தில் பண்ணைகளை நிர்வகிப்பதிலிருந்து அனைத்து இயக்க வேலைகளும் நான் மட்டுமே கவனிக்க வேண்டிய சுமை எனது தோளகளில் விழுகிறது. எனக்கு உதவியாக ஏனைய போராளிகளும், குறிப்பாக குமணன் மனோ மாஸ்டர் போன்றோர் ஒத்துழைக்கின்றனர். மத்திய குழு உறுப்பினர்களும் பிரபாகரனும் களத்தில் இருந்து வெளியேறியதன் சுமையை உணரக் கூடியதாக இருந்தது. தனியே முடிபுகளை மேற்கொண்டு வேலைகளைச் செய்வது இது முதல் தடவை அல்ல. ஆனால் முன்னைய சந்தர்ப்பங்களைப் போல இலகுவானதாக இருக்கவில்லை. போராளிகளதும் பண்ணைகளதும் தொகை அதிகரித்திருந்தது. அத்தோடு கூடவே புதிய பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வுகாணவேண்டிய பழுவும் அதிகமானது.

இலங்கையில் பிரபாகரன் பயிற்சி முகாமில் இருந்தவர்கள் மீது தன்மீதான அதிர்ப்தியை விட்டுச்சென்றிருந்தார். பிரபாகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து பல உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் குரலெழுப்பினர். வீரவாகு ரகு தொடர்பான பிரசனைகளை தொடர்ந்தும் சலசலப்பிற்கு உள்ளாகியிருந்தது. இவற்றையெல்லாம் சமாதானப் படுத்தி உறுப்பினர்களை ஒழுங்கிற்குக் கொண்டுவரவேண்டிய நிலையில் நான் இருந்தேன்.

பிரபாகரன் தமிழகம் சென்றதும் இயக்கதினுள் புதிய பிரச்சனை ஒன்று தலை தூக்குகிறது. பொதுவாக அனைவரும் சென்னையில் தண்டையார் பேட்டை வீட்டில்தான் தங்கியிருப்பது வழமை. அங்கே போராளிகள் அனைவரும் இரவு நீண்ட நேரம் இயக்க நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கச் செல்வார்கள். அவ்வேளையில் ஊர்மிளாவும் அங்குதான் தங்கியிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்த பின்னர் மொட்டை மாடியில் சென்று உறங்குவார். முகுந்தனும் (உமாமகேஸ்வரன்) பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கும் வேளையில் அவரும் மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவார். உமாமகேஸ்வரனின் இந்த நடவடிக்கை குறித்து கலாபதிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

பலருக்கும் உமாமகேஸ்வரன் – ஊர்மிளா குறித்த சந்தேகங்கள் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. உமாமகேஸ்வரன் பலஸ்தீன இராணுவப்பயிற்சிகுச் செல்கின்ற வேளையில் விமான நிலையத்தில் அவர்கள் காதலர்கள் போல நடந்துகொண்டதாக அவ்வேளையில் விமான நிலையத்திலிருந்த நாகராஜா பிரபாகரனிடம் கூறினார். நாகராஜா வழமையாகவே சந்தேகப்படும் சுபாவம் உடையவராதலால், பிரபாகரன் அவரைத் திட்டியிருக்கிறார். தவிர அவர்களுடைய உடல் மொழி குறித்து வேறு உறுப்பினர்களும் கூடப் பேசியிருக்கின்றனர். குறிப்பாக பிரபாகரனிடம் இவை குறித்து முறையிட்ட போதிலும் பிரபாகரன் முகுந்தன் மீது சந்தேகம் கொள்ளவில்லை.

இவ்வாறான சந்தேகங்கள் ஏற்கனவே பேசப்ப்ட்டதால் நாகராஜாவும் கலாபதியும் ஒரு நாள் அனைவரும் உறங்கச் சென்றபின்னர் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாக உறங்குவதைக் கண்டிருக்கிறார்கள். மறு நாள் காலை இவர்களிருவரும் பிரபாகரனிடம் இது குறித்துக் முறையிட்டிருக்கிறார்கள்.

பின்னதாக நாகராஜாவும் பிரபாகரனும் உமாமகேஸ்வரனை அழைத்து இது தொடர்பாகக் கேட்டிருக்கிறார்கள். உமாமகேஸ்வரன் பெரிதாக எதுவும் உடனடியாகச் சொல்லவில்லையெனினும் இதுதவிர நான் வேறு ஏதாவது தவறிழைத்திருக்கிரேனா என அவர்களைக் கேட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

உமாமகேஸ்வரனின் நடவடிக்கையும் அதற்கான பதிலும் உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்துகிறது. நாம் அனைவருமே அரசியலைத் தனிமனிதத் தூய்மைவாததிலிருந்து தன் புரிந்துகொண்டவர்கள். அதிலும் தலைமைப் பொறுப்பிலிருந்த உமாமகேஸ்வரனின் இந்தப் பதில் அவரின் உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த நடவடிக்கைகள் தூய்மையான, கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பை உருவாக்குவதற்கான கனவில் ஈடுபட்டிருந்த எம்மவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.

ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர். அதுவும் தலைமைப் பதவியிலிருக்கின்ற ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களை மிகுந்த கோபம்கலந்த வெறுப்புடனேயே நோக்கினர்.

சில மணி நேரங்களில், ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்த உமாமகேஸ்வரன், அனைத்தையும் மறுக்கிறார்.இது தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று கூறுகிறார். உமாமகேஸ்வரன் சாட்சிகளுடன் கூடிய சம்பவம் ஒன்றை மறுத்த போது அது மேலும் அவர்மீதான வெறுப்புணர்விற்கு வித்திடுகிறது. பொதுவாக அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனுக்கு எதிரானவர்களாக மாறுகின்றனர்.

இவ்வேளையில் முன்னர் கென்ட்பாமில் தங்கியிருந்த ரவி, இவர்களிடையேயான தொடர்பு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் என்று சொல்கிறார். தவிர, கொழும்பில் ஊர்மிளா – முகுந்தன் தொடர்பு என்பது ஓரளவு அறியப்பட்ட விடயம் தான் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் அறிந்துகொண்ட பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனைத் தலைமைப்பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கோருகின்றனர்.
சாதாரண உறுப்பினர்களுக்குப் பாலியல் தொடர்புகளிருப்பதைப் பலதடவைகள் நாங்கள் கண்டுகொள்வதில்லை. செல்லக்கிளிக்கு பெண்களுடன் தொடர்புகள் இருப்பதாக அவர் பண்ணைகளில் எம்மிடம் பல தடைவைகள் கூற முனைந்த வேளைகளில் நானும் ஏனையோரும் அதுபற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம் என்று தடுத்திருக்கிறோம்.

பிரபாகரனுக்குக் கூட இது தொடர்பாகத் தெரியும். தவிர,செல்லக்கிளி மீது யாரும் கோபப்படுவதில்லை. அவரை துடிப்பான குறும்புக்கார இளைஞனாகவே அனைவரும் கருதினர். ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உமாமகேஸ்வரனை தலைமைப்பதவியிலிருந்து இறங்கி சாதாரண உறுப்பினராகச் செயற்படுமாறு கோருகின்றனர்.

அதே வேளை ஊர்மிளாவை பெருஞ்சித்தனார் வீட்டிற்கு மாற்றிவிடுகிறார்கள். உமாமகேஸ்வரன் தண்டையார்பேட்டை வீட்டிலிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு மாறுகிறார். கூடவே ஏனைய உறுப்பினர்களுடனான தொடர்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்.
இந்த வேளைகளில் அன்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் சென்னையில்தான் இருக்கின்றனர். அவர் சென்னைக்கு வந்து சில நாட்களிலேயே இயக்கத்தின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

பாலசிங்கமும் இந்தப்பிரச்சனை தொடர்பாக ஏனையோரிடம் பேசுகிறார். இந்தப் பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதுதான் பாலசிங்கத்தின் கருத்தாக அமைந்திருந்தது. . இவையெல்லாம் ஒரு புறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க தமிழ் நாட்டில் உமாமகேஸ்வரனின் முரண்பாடு கூர்மையடைகிறது. தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு முன்வைத்த கோரிக்கையை அவர் நிராகரிக்கிறார்.

உமாமகேஸ்வரன் தொடர்ச்சியாக தான் அவ்வாறு எந்தத் தொடர்பையும் ஊர்மிளாவுடன் கொண்டிருக்கவில்லை என மறுக்கிறார். இறுதியில் மத்திய குழு கூட்டப்பட வேண்டும் என்றும், மத்திய குழுவின் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் கூறுகிறார்.

மத்திய குழு உறுப்பினர்களில் நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். உமாமகேஸ்வரன் என்னையும் இணைத்துத் தான் மத்தியகுழு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, என்னை இலங்கையிலிருந்து வரவழைத்து அதன் மத்திய குழு ஒன்று கூடலை நிகழ்த்திய பின்பே இறுதி முடிவிற்கு வருவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
Welcome to STFA
இப்பதிவில் உள்ள கட்டுரைகள் "இனிஒரு" எனும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது - நன்றி "இனிஒரு" இணையம்